Thursday, 17 October 2013

தீபாவளிக்கு பயணிகள் சொந்த ஊர் செல்ல 8000 பஸ்கள்

தீபாவளிக்கு பயணிகள் சொந்த ஊர் செல்ல 8000 பஸ்கள் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

முன்பதிவுக்கு 25 மையங்களையும் அமைத்துள்ளது

தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து, 8,350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. 


தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பிலும், சிறப்பு பேருந்துகளை இயக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.


அனைத்து மாவட்ட தலைநகர்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, இம்மாதம், 29ம் தேதி - 700; 30ம் தேதி - 1,000; 31ம் தேதி - 1,200; நவ., 1ம் தேதி - 1,400 என, மொத்தம் 4,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.மேலும், சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து, 29ம் தேதி - 634; 30ம் தேதி - 950; 31ம் தேதி - 1,256;நவ., 1ம் தேதி - 1,210 என, மொத்தம் 4,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

இதே போல், தீபாவளி பண்டிகை முடிந்த பின், பொதுமக்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் வகையில், இதே அளவிலான பேருந்துகள், நவ., 2ம் தேதி முதல், 5ம் தேதி வரை இயக்கப்படும்.


மேலும், 300 கி.மீ., தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்பு பேருந்துகளுக்கு, www.tnstc.in என்ற இணையதளம் மூலம், முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், 25 சிறப்பு முன்பதிவு நிலையங்கள் செயல்படுத்தவும், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 200 சிறப்பு பேருந்துகள் இயக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தீபாவளியை ஒட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலகத்தின், 044 - 24794709 என்ற தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். 

No comments:

Post a Comment