Wednesday, 13 March 2013

வாருங்கள், போதையை வீழ்த்துவோம்! வரும் 17ல் கோவையில் சிறப்பு நிகழ்ச்சி



போதையில் வீழ்ந்தவர்களை மீட்பதற்கு உதவும் முக்கிய நிகழ்வு, கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் வரும் ஞாயிறன்று நடக்கவுள்ளது; குடியிலிருந்து மீள விரும்புவோரும், பிறரை மீட்க விரும்புவோரும் இதில் பங்கேற்று பயனடையலாம்.

தமிழகத்தில் குடிக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கீழ்த்தட்டு மக்களிடத்தில் வெகுவேகமாகப் பரவி வரும் "டாஸ்மாக்' கலாச்சாரம், பல குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்திக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவோரும், குடி உள்ளிட்ட போதை வஸ்துக்களை உட்கொண்ட நிலையிலேயே குற்றங்களைச் செய்திருப்பதும் பல வழக்குகளில் நிரூபணமாகியிருக்கிறது. பட்டப்பகலில் பள்ளிச் சீருடையில், மது மயக்கத்தில் தடுமாறும் மாணவர்களை அதிகம் பார்க்க முடிகிறது. மதுக்கடைகளை மூட வேண்டுமென்று, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும், காந்தியவாதிகளும் பல விதங்களில் போராடி வந்தாலும், இப்பிரச்னையை சமூகக்கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கு தமிழக அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. வருவாய் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதால், குடிப்பவர்களின் எண்ணிக்கையும், குடிப்பதன் அளவும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மது விற்பனையில் முதலிடத்தைப் பிடிக்கும் போட்டியில், உழைப்புக்கு பெயர் பெற்ற கோவை மாவட்டமும், முன்னணியில் இருப்பது வேதனைக்குரிய முரண்பாடு. இந்த மாவட்டத்தில், மாதத்துக்கு, மூன்றரை லட்சம் மது பாட்டில்களும், ஒன்றரை லட்சம் பீர் பாட்டில்களும் விற்பனையாகின்றன; மாதத்துக்கு 140 கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு 1,600 கோடி ரூபாய்க்கு கோவை "குடி'மகன்கள் குடித்துத் தீர்க்கின்றனர். இந்த தொகையில், எத்தனை பாலங்கள், எத்தனை சாலைகள் அமைக்கலாம் என்பது ஒரு புறமிருக்கட்டும்; எத்தனை குடும்பங்களுக்குப் போய்ச் சேர வேண்டிய தொகை இது?. திருமணத்துக்காக, கல்விக்காக, மூன்று வேளை உணவுக்காக வைத்திருந்த எத்தனை பணம், இந்த மது பாட்டில்களில் கரைந்தது என்பதை யாராலும் கணக்கிட முடியாது. குடிக்கு அடிமையாகி இறந்தவர்களையும், அதனால் நிலை குலைந்த குடும்பங்களையும் யாராலும் மதிப்பிடவும் முடியாது. போதையின் பாதையில் வெகுதூரம் சென்று விட்ட தமிழ்ச் சமுதாயத்தை மீட்க வேண்டிய அரசு, மவுனம் சாதிக்கிறது. அதனால், போதையில் வீழ்ந்து கிடக்கும் கணவரை, மகனை, நண்பனை மீட்க வேண்டிய பொறுப்பு, நம்மையே சார்ந்திருக்கிறது. கோவையில் அதற்கான இனிய துவக்கமாக ஞாயிறன்று நடக்கிறது நல்லதொரு நிகழ்வு. 

கோவை மக்களின் இதயங்களை இனிப்பால் வென்ற "ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' நிறுவனம், ஞாயிற்றுக்கிழமைகளில் "ஞாயிறுதோறும் சந்திப்போம்; நல்லதே சிந்திப்போம்' என்ற தலைப்பில், ஆன்மிகம், இசை, சமூகம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில், சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில், வரும் ஞாயிற்றுக்கிழமையை "போதைக்கு எதிரான ஞாயிறாக' மாற்றும் வகையில், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில், "போதை-ஒரு விஞ்ஞான பார்வை' என்ற தலைப்பில் மனோதத்துவ நிபுணர் சீனிவாசனும், "போதை-மீள்வதும் மீட்பதும் நமது கடமை' என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் சிவசங்கரியும் உரை நிகழ்த்துகின்றனர். கோவை புரூக்பாண்ட் ரோட்டிலுள்ள கிக்கானி பள்ளியில், வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி துவங்குகிறது. 

போதையால் ஏற்படும் தீமைகளை, நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் விஷயத்தோடு விளக்கப்போகும் இந்நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்பது முக்கியம்; அதை விட, எப்போதும் "உற்சாகத்தில்' மிதப்போரையும் "தெளிவாய்' அழைத்து வருவதும் அவசியம்.

No comments:

Post a Comment