Saturday 10 August 2013

அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம்

கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம்

கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், பி.எட் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்புக்கு சுமார் 3 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இதில் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.300 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் சான்றொப்பம் பெற்ற ஜாதிச்சான்றிதழ் நகல் சமர்ப்பித்து ரூ.175 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் நாள்தோறும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வினியோகிக்கப்படும். இந்த பணி வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட 16–ந் தேதி வரை நடைபெற உள்ளது. 15–ந் தேதி மட்டும் சுதந்திர தினவிழாவையொட்டி விண்ணப்பம் வினியோகம் நடைபெறாது.

பட்டதாரி மாணவ–மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, செயலாளர், தமிழ்நாடு பி.எட் மாணவர் சேர்க்கை–2013, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை–5 என்ற முகவரிக்கு 16–ந் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இந்த இடங்கள் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தி, தகுதியுள்ள பட்டதாரி மாணவ–மாணவிகள் விரும்பும் கல்லூரிகளில் சேர ஆணை வழங்கப்பட உள்ளது. இதன்படி கலந்தாய்வு இந்த மாதம்(ஆகஸ்டு) இறுதியில் நடைபெறும்.

No comments:

Post a Comment