Friday 16 August 2013

உங்களுக்குள் ஒரு விஞ்ஞானி இருக்கிறாரா? பிடியுங்கள் ரூ.5 லட்சம் பரிசு

நம் நாட்டில் விவசாயம், தொழில், கலை, அறிவியல், கட்டுமானம் மற்றும் பல துறைகளில் கிராமத் தொழிலாளர்கள், கலைஞர்கள், ஆலைத் தொழிலாளர்கள், பொறியாளர்கள், தொழில் முனைவோர்கள் போன்ற பலரும் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் யுக்திகளை கையாண்டு, தமக்குள் பல சாதனைகள் புரிந்து வருகின்றனர். இருந்தாலும், அவர்களுடைய திறமைகள் மற்றும் சாதனைகள் வெளி உலகத்திற்கு தெரிவதில்லை. அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்காக, நாட்டிலேயே முதன் முறையாக கருத்துக்கள், கண்டுபிடிப்புகள், நூதனங்கள் பற்றிய தேசிய தொழிற்காட்சி, கோவையில், செப்., 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. கண்காட்சியில் இடம் பெறும், தரமான கண்டுபிடிப்புகளுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் தொழில் துவங்கவும், வியாபார ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தகுந்த வாய்ப்புகள் உண்டு. 



கோவையில் உள்ள தலைசிறந்த பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஜி.ஆர்.தமோதரனின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின், ஒரு பகுதியாக, இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. "ஐ3' எக்ஸ்போ என்ற தலைப்பில் நடைபெறும், இந்த தொழிற்காட்சியில் பங்கு பெற முதலில் வருபவர்களுக்கு, ரயில் கட்டணம் கொடுக்கப்படும். தொழிற்காட்சியில் பங்கு பெற இடவசதியும், அரங்க வசதியும் கட்டணம் ஏதுமின்றி செய்து தரப்படும். தென்னை மரத்தில், வேகமாக ஏறுவதற்கு கயிறுக்கு பதிலாக, மரமேறும் சைக்கிள் கண்டுபிடித்திருப்பார். ஆனால், அவர் அதை தான் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருப்பார். இந்த தொழிற்காட்சியில் அவர் அந்த மரமேறும் சைக்கிளை கொண்டுவந்து காட்சிப்படுத்தினால், அது அவருக்கு, புகழையும், பரிசையும் பெற்றுத் தருவதோடு, நல்ல தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்தி தரும். இதே போல, பண்ருட்டியில் படிக்காத ஒருவர், தன் முந்திரிக்காட்டில், காயில் இருந்து முந்திரியை எளிதாக பிரிக்க, ஒரு சிறிய கருவியை பயன்படுத்தி வருவார். ஆனால், அது வெளி உலகிற்கு தெரியாமல் இருக்கும்; உண்மையில் அதுதான் சிறந்த கண்டுபிடிப்பு. 



இரவில், எதிரில் வரும் வாகனங்களின் ஒளிபட்ட மாத்திரத்தில், தானாகவே முகப்பு விளக்குகளை, "டிம்' செய்யச் செய்யும் கருவியை, ஒரு பள்ளி மாணவர் தான் கண்டுபிடித்தார். நிலையங்களில் நிற்கும் ரயில்களில் இருந்து மனித கழிவுகள் விழாதவண்ணம் தடுக்கும் தடுப்பை, ஒரு மாணவி தான் கண்டுபிடித்து உள்ளார். இப்படி எத்தனை எத்தனையோ கண்டுபிடிப்புகள், உங்கள் பகுதியில் யாரோ ஒருவர் நிகழ்த்தியிருக்கக் கூடும். இப்படி, உங்கள் வீட்டில், தெருவில், கிராமத்தில், ஊரில் உள்ள கண்டுபிடிப்பாளரை கவுரப்படுத்துவதற்காகவும், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற்றுவதற்காகவும் நடைபெறும் இந்த தொழிற்காட்சியில், நீங்கள் பங்கேற்கலாம்; உங்களுக்கு தெரிந்தவர்களையும் பங்கேற்க செய்யலாம். மிகப்பெரிய நன்மைகளை ஏற்படுத்த போகும் இந்த தொழிற்கண்காட்சியில் பங்கேற்கவும், இது பற்றி, தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 97894 59981 மற்றும் 0422-43 447.


No comments:

Post a Comment